Thursday 25 January 2018





வாழ்வியல் இலக்கியப் பொழில் 01-01-2018 இலக்கியக் கலந்துரையாடல்
 

இயற்கை மழையும் இணைந்துகொண்ட இலக்கியக் கலந்துரையாடல்: 01-01-2018

 

யாவருக்கும் நன்னாளாம் ஆங்கிலப் புத்தாண்டில் 01-01-2018 பகல் 2 மணியளவில் வாழ்வியல் இலக்கியப் பொழில் விடுத்த அழைப்பினை ஏற்று, புதுவை முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கிய நிகழ்வில் கவிஞர் சீர்காழி உ.செல்வராஜூ தொடக்கவுரையாக முனைவர் அவர்களின் தமிழ்ப்பணி அளப்பரியது என்றும் முந்தைய ஆவணப்படத்தின் முக்கியத்துவம், முனைவர் அவர்களுக்கு நாட்டுப்புற பாடல்களின் ஆர்வம் மற்றும் அதற்காக ஆற்றிவரும் அரியப்பணிகள் மற்றும் 31-12-2017 மாலை 5 மணியளவில் சையது அலி சாலையில் அமைந்துள்ள ஆனந்தபவன் உணவகத்தின் இரண்டாவது தளத்தில் நடைபெற்ற இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளார் அவர்களின் ஆவணப்பட வெளியீடு பற்றியும் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

 

தொடர்ந்து உரையாற்றிய கவிஞர் மதியழகன் அவர்கள் முதன்முறையாக 31-12-2017 அன்றைய ஆவணப்பட வெளியீட்டில் முனைவர் அவர்களின் அரியத் தமிழ்பணியை அறிந்ததில் பேருவகை கொண்டார். இனிவரும் படைப்புகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளையும் தவறாமல் தருவதாக உறுதியளித்தார்.

 

அனைவருக்கும் புதியவர் தொழில்நுட்ப பொறியாளர் கி.இரவீந்திரன் தமது குடும்பத்தினருடன் வந்திருந்து சிறப்பித்தார். தமிழ் மீது அளவிலா ஆர்வம் கொண்ட அவர் வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்விற்கு தம்மால் இயன்ற வகையில் உதவிடவும் முனைவர் அவர்களின் தமிழ்த்தொண்டில் தம்மை இணைத்துக்கொள்வதாகவும் கூறியது வரவேற்கத்தக்கது.

 

கவிஞர் சாவித்ரி செல்வராஜ் அவர்கள், முனைவர் அவர்களின் அரியப் பணிகளை பாராட்டியும் அதேசமயம் தொடர்பணிகளுக்கு இடையே ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தையும் சரிவர கவனித்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார்.

 

கலந்துரையாடலில் தமது தமிழ்ப்பணியின் அனுபவங்களை கோர்வையாக அளித்த முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் தமிழ்ச்சுவை பொருந்திய உரை மிகவும் எளிமையானது. இதுவரை தமிழ்ப்பணியாற்றியவர்களில் உலகிற்கு அதிக அளவில் அறியப்படாதவர்களை இனம்கண்டு இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியவர்களின் நீண்ட பட்டியலையும் நம்மிடையே வைத்து மகிழ்ந்தார். இருபது நூல்களை இயற்றியவர் என்பதையும் உரையின் இறுதியில் மிகவும் எளிமையாக வைத்தார்.

 

நினைவுப்பரிசாக படைப்புகளை பரிமாற்றம் செய்துகொண்டும் வாழ்வியல் இலக்கியப் பொழிலின் முந்தைய நிகழ்வுகளை காணொளி வழியாக கண்ணுற்றும் சுவைபட கலந்துரையாடல் நிறைவுற்றது.

 

முனைவர் அவர்களின் மலேசிய, சிங்கப்பூர் பயணத்தில் அமைந்த இந்த சந்திப்பு பல்வேறு ஆக்கப்பணிகளுக்கு அச்சாரமாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

 

சில புகைப்படங்களை கீழ்கண்ட பதிவேற்றம் செய்துள்ளோம்.

 

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:


நன்றி !

 

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்

 


No comments:

Post a Comment