Tuesday 13 March 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 10-03-2018-ல் 5ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (10-03-2018 அன்று 5 ஆவது நிகழ்ச்சி)


இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,


சிராங்கூன் சமூக மன்றத்தில் 10-03-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (5 ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. "ஞான விநாயகனே....." என்னும் அழகியதோர் பக்திப் பாடலை பாடினார் கார்த்திகா. திருமதி தேன்மொழியாள் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.


வழக்கம்போல் ஶ்ரீயா ஶ்ரீராகவ் முதல் படைப்பாக "பெண்மையின் பன்முக தன்மை" என்னும் தலைப்பில் அமைந்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் அவர்களின் பாடல் வரிகளை பாடினார் காணொளி வழியாக. தொடர்ந்து வந்த ரியா முகில் "ஓடி விளையாடு பாப்பா" என்னும் பாரதியார் பாடலை  அழகாகப் பாடினார்.  பிரஜித், "விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை" என்னும் தலைப்பில் கம்பருடைய வாழ்வில் கண்ட ஒரு கதையை சுவைபட கூறிச் சென்றார். அடுத்து வந்த சமிக்ஷா, சான்றாண்மை, கேள்வி, அன்புடமை என்னும் மூன்று அதிகாரங்களில் உள்ள முப்பது திருக்குறள் அனைத்தையும் முழுமையாக கூறிச் சென்றார். "ஒப்புரவு ஒழுகு" ஆத்திசூடிக் கதையை கூறி சென்றார் கவின்நிலா. கமலிகா மழலைப் பாடல் ஒன்றைப் பாடி சென்றார். தொடர்ந்து வந்த நிதிஷ்ராஜ் திருக்குறள் பலவற்றை கூறிச் சென்றார்.  


சர்வினி "முட்டாள் முதலை" என்னும் தலைப்பில் நல்லதொரு கதையை வழங்கினார். நல்வழி நூலில் வந்த ஈகை மற்றும் உழவுத்தொழில் பற்றிய ஔவையார் பாடல்களைப் பாடியும் பொருள் கூறியும் உரை நிகழ்த்தினார் ஜீவஜோதிகா. தெனாலிராமன் கதையை தம் பாணியில் அழகாகக் கூறிச் சென்றார் முரளிதரன். பத்மநாபன் கம்பராமாயணத்தில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடலை அழகாகப் பாடினார். "சொர்க்கமும் நரகமும்" என்ற தலைப்பில் ஒரு அழகிய நீதிக்கதையை கூறினார் காருண்யா. நந்திகா, அன்புடமை என்னும் அதிகாரத்தில் வந்த திருக்குறளைப் படைத்தார். தொடர்ந்து வந்த சிவ்ரிஷி, ஒவ்வொரு வீட்டிலும் ஏன் திருக்குறள் நூல் இருக்க வேண்டும் என்ற சிற்றுரையை திறம்பட நிகழ்த்தினார். தொடர்ந்து வந்த விஸ்வா, "காலத்தினால் செய்த உதவி" என்ற தலைப்பில் அழகான் உரை ஒன்றை நிகழ்த்தினார். சம்ரிதா, மலர்ந்த முகத்தோடு விருந்தோம்பல் வழங்க வேண்டும் என்பது பற்றிய அழகியதோர் திருக்குறள் கதையை சிறப்பாக கூறினார்.


247 எழுத்துகளையும் எளியப் பாடல் ஒன்று மூலம் வழங்கினார் காவியா சரவணன். "அம்மா இங்கே வா வா...; ஆசை முத்தம் தா தா...." என்ற மழலைப் பாடலை பாடினார் ஜோஷிகா. பத்து திருக்குறள்களை பாடிச் சென்றார் பிரமோத்வர்ஷன். அடுத்ததாக மூன்று திருக்குறளைப் பாடினார் தனிஷ்ராஜ்.


சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியில் அறிமுக உரையாக, ஔவையார் எழுதிய நூல்களைப் பற்றிய இலக்கிய மற்றும் இலக்கண செய்திகளை தொகுத்து வழங்கினார். அதில் அசதிகோவை என்ற நூல் பற்றிய விளக்கமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


சிறு இடைவேளைக்கு பின் தொடர்ந்த நிகழ்ச்சியில், ஓவியம் வரையும் ஆற்றலை வளர்க்கும் அங்கமா சங்க கால காட்சிகள் ஓவியம் வரைதல் அங்கத்தில் பங்கேற்ற மூவரின் ஓவியங்கள் திரையிடப்பட்டன. மிகவும் சிறப்பாக வண்ணம் நீட்டி இருந்ததை திரையில் இட, அதைப்பற்றிய விளக்கமும் கூறினர். அதில், நெய்தல் படக் காட்சியை கமலிகாவும், செம்பிய நாட்டார் தளபதி சேதுபதி படத்தை ஜீவஜோதிகாவும், கண்ணகி படத்தை நந்திகாவும் வரைந்திருந்தனர். அனைத்து படங்களும் மிகவும் நேர்த்தியாகவும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பாகவும் இருந்தது என்றால் அது மிகையல்ல.


சங்க இலக்கிய உரையில், கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி சங்க இலக்கியத்தில் "வணிக மேலாண்மை" என்றத் தலைப்பில் சிற்றுரை வழங்கினார். அடுத்ததாக, சிறுபஞ்சமூலம் என்ற நூலில் இருந்து பத்து பாடல்கள் மூலம் நல்ல பல தகவல்களை வழங்கினார் மருத்துவர் திருமதி அன்னபூரணி. சித்த மருத்துவ குடும்பத்தில் இருந்து வரும் கவிஞர் சாவித்திரி பல அரியச் செய்திகளை சுவைபட கூறினார். வழக்கம் போல் பாடலுடன் வந்த கவிஞர் மதியழகன், தாம் எழுதி வந்த இரு குழந்தை பாடல்களில் "ஆம்மா தந்தார் அம்மா தந்தார் அழகு தோசைதான்..." என்றப் பாடலை கவின்நிலாவுடனும், "செல்லக்குட்டி பாப்பாவுக்கு..." என்றப் பாடலை சிறுமி ஜீவஜோதிகாவுடனும் சேர்ந்து பாடினார்.


வழக்கம் போல், இந்த மாதம் பிறந்தநாளை கொண்டாடுவோர் சர்வினி, நிகிதா மற்றும் தனிஷ்ராஜ் இவர்களை மேடையில் ஏற்றி, கவிஞர் அறிவுமதி அவர்கள் இயற்றிய  தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாடல்களை பாடி அனைவரும் தம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


ஊடகவியலாளரான திரு மணிமாறன் அவர்களின் குழுவினர் இன்றைய நிகழ்ச்சியினையும், தொடக்கம் முதலே பதிவு செய்து வந்தனர். அவர்களின் சகோதரர் சரவணன் நிகழ்ச்சியில் வந்த பல அங்கங்களையும் கண்டு களிப்புற்றார்.  


தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது. நன்றியுரை வழங்கிய திருமதி கோமதி மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார். நிகழ்ச்சி நெறியாளர்களாக திருமதி துளசிமணி மற்றும் திருமதி கோமதி இருவரும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  5 ஆவது சந்திப்பு 10-03-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:

https://photos.app.goo.gl/AhXlJzf53WtlGhcZ2
https://photos.app.goo.gl/AhXlJzf53WtlGhcZ2

காணொளியை இணையத்தில் காண ணைப்பு கீழே.

You tube link:



வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:




முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

நன்றி !


மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்
சாங்கி கடற்கரை சந்திரமுறைப் புத்தாண்டு  2018 :

சந்திரமுறை புத்தாண்டு நாளில்
சங்கத் தமிழ்க்குடும்பம் சங்கமம்
அங் மோ கியோ ஷெங் சான்
கொங்கு தமிழர் நாங்கள்
சாங்கி கடற்கரை சேர ஒன்றாய் இணைய...
ஓங்கி உரைத்த கைகளால்...
ஒருமித்த  உணர்வால்;
உறவினராய் ஒன்றாய்க்கூடி !

ஒன்பது மணியளவில் ஒய்யார பயணம் தொடக்கம்...
ஒப்பில்லாப் பயணம் மத்திய விரைவு சாலையில்...
தாம்பனீஸ் விரைவுச்சாலை
இடமாக திரும்ப லோயோங் வே...
துணைக்கு வரவேண்டி
லோயாங் டோ பெக் கோங்
ஆலயத்தில் கூட நல்வேண்டல் !

சஞ்சீவி மலைதன்னை
சக்திநிறை ஒற்றைக்கையால்
உருபெயர்த்த அனுமன்
உயர்ந்த சிலையாய்
ஓங்கி நிற்கும் அரசமரத்தடியில்...
சாங்கி கிராமத்தில் சாதிக்கும் ராமனுடன்...
நாங்களும் தரிசித்தோம்
தவணைமுறையில் அருளைப் பெற்றபடி
தனித்தனியாக எல்லா தெய்வத்திடமிருந்தும்...
தேங்கிய ஏக்கமெலாம் திரளானது
சிங்கை எல்லையின்
கிழக்கு முனையில் நாங்கள் !

தாழ்வாக விமானம் பறக்க
தாவிப் பிடிக்க ஆசை...
கிட்டத்தில் சப்தம்
எட்டிப் பிடிக்க ஆசை...
புலா உபின் பக்கத்தில் தெரியும் தீவு
புலாவ் தேகோங் இராணுவ பயிற்சி தீவு
கண்ணுக்கு எட்டிய தூரத்தில்
இந்தோனேசிய எல்லை காண...
கொட்டி அழைத்தது கடற்கரை
சீனப்பெருநாள் பொழுதை இயற்கையோடு !

நிரம்பிய கொள்கலன்
நிதானமாய்ச் சென்ற கப்பல்
செம்பாவாங் துறைமுகத்திற்கு இடதாக...
பாசிர் பஞ்சாங் துறைமுகத்திற்கு வலதாக
பலவடுக்கு பலசரக்குக்
கடற்பயணம் அண்டம் விட்டு அண்டம் செல்ல...

குடும்பமாய்ப் பலர்
குதூகலிக்க சிலர்
கூடாரத்தில் குடும்பம்....
கொத்துக்கொத்தாய் உறவுகள்
பூத்திட்ட செந்நாய் ஆண்டு....
புத்துணர்வு பலரின் மனதில்
வித்திட்ட ஷெங் சான் சமூக மன்றம்
மொத்தத்தில் இந்திய நற்பணி
செயற்குழு ஏற்பாட்டில் யாவும் !

குழந்தைகள் பெரியவர் கலந்தே
குழுவானார்கள் பச்சை சிவப்பு என
கையில் கட்டிய பட்டைதான் அடையாளம்
கணக்கில் இருபதைத் தாண்டி...
இரண்டு குழுக்களாய் !

முதல் ஆட்டம்....
ஒளித்து வைத்த வெண்ணிற
பன்னிரண்டு பந்துகள்
வேட்டையாட விரட்டி விட்டனர்
பன்னிரண்டு பந்தில் பாதிக்கு மேல் பச்சை குழு
பாராட்டும் பெற்றது முதல் வேட்டையில் !

சோடவில்லை சிவப்பு குழு
தண்ணீர் குவளை தடுமாற்றம் இன்றி நிரப்ப
பாராட்டை தட்டிச் சென்றது.
கடற்கரை குளியல் களிப்பில் யாவரும்
உடற்பயிற்சி எனவெண்ணி உப்பு நீரில் உடம்பும் மனதும்
பங்கிட்ட உணவெல்லாம் பாங்காய் புத்துண்டு
பரவசத்தில் பகலெல்லாம் களிப்பு !
வழக்கமான உணவுதான் விருந்தாய்க் களித்தனர்
வகைவகையான உணவில்
புளியோதரை தயிர்சாதமும் தடையில்லலா
எலுமிச்சை ஊறுகாய் கூட
மொத்தத்தில் நிரம்பிய வயிறு மட்டும் அல்ல மனதும் தான் !

பாலித்தீன் தட்டில் பகடையாய்ப் பிங்பால் விளையாட்டு...
ஒன்பதுக்கு ஐந்து என தட்டிச்சென்றது சிவப்பு குழுவின் பாராட்டு
பலூன் ஊதும் விளையாட்டில் பச்சையை மிஞ்சியது மீண்டும் சிவப்பு குழு...
கிரீன் டீ குடிப்பதில் கிளர்ச்சி எழுச்சி...
பச்சை குழு பரித்தது வெற்றிக் கனியை...,
கடற்கரை விளையாட்டை களிப்போடு களித்தோமே !

பிங்பால் யாவும் தொப்பியில் ஏந்த வேண்டும்
பச்சை சிவப்பு குழுவிற்கு மீண்டும் போட்டி
பிச்சை ஏந்தும்படி ஒருவர்
குழுவினர் மற்றொரு முனையில் மூன்று கெஜம் தூரம் தள்ளி நிற்க !

புள்ளிகளை அள்ள வேண்டி
துள்ளிய விளையாட்டும் களிப்பே !
இன்றைய வெற்றியாளர் சிவப்பு குழுவாம் !
இடையிடையே ஏறும் விமான சத்தம்
தடையில்லை கொண்டாட்டம்
மடை திறந்த கவலையெல்லாம்
கடற்கரையில் நிறுத்தி விட்டு
திடமான மனத்தோடு பயணம் வீட்டிற்கு !

மட்டற்ற மகிழ்ச்சி
திட்டமிட்ட நேரத்தில் தெவிட்டாத இன்பம் !
வாழ்நாள் என்றும் எங்கள் மனதில் தங்கும் !
புறப்பட்ட பேருந்தில்
வார்த்திட்ட கவிதை சுடச்சுட
மங்காத எங்கள் மனதில்
தங்கட்டும் வாழ்நாள் பதிவாய்
வருடிவிட வரட்டும் வருடங்கள் பல கடந்தும்
பசுமை நினைவுகள் பதியட்டும் நினைவலையாய் !




ஆக்கம்
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்