Tuesday, 13 March 2018

சாங்கி கடற்கரை சந்திரமுறைப் புத்தாண்டு  2018 :

சந்திரமுறை புத்தாண்டு நாளில்
சங்கத் தமிழ்க்குடும்பம் சங்கமம்
அங் மோ கியோ ஷெங் சான்
கொங்கு தமிழர் நாங்கள்
சாங்கி கடற்கரை சேர ஒன்றாய் இணைய...
ஓங்கி உரைத்த கைகளால்...
ஒருமித்த  உணர்வால்;
உறவினராய் ஒன்றாய்க்கூடி !

ஒன்பது மணியளவில் ஒய்யார பயணம் தொடக்கம்...
ஒப்பில்லாப் பயணம் மத்திய விரைவு சாலையில்...
தாம்பனீஸ் விரைவுச்சாலை
இடமாக திரும்ப லோயோங் வே...
துணைக்கு வரவேண்டி
லோயாங் டோ பெக் கோங்
ஆலயத்தில் கூட நல்வேண்டல் !

சஞ்சீவி மலைதன்னை
சக்திநிறை ஒற்றைக்கையால்
உருபெயர்த்த அனுமன்
உயர்ந்த சிலையாய்
ஓங்கி நிற்கும் அரசமரத்தடியில்...
சாங்கி கிராமத்தில் சாதிக்கும் ராமனுடன்...
நாங்களும் தரிசித்தோம்
தவணைமுறையில் அருளைப் பெற்றபடி
தனித்தனியாக எல்லா தெய்வத்திடமிருந்தும்...
தேங்கிய ஏக்கமெலாம் திரளானது
சிங்கை எல்லையின்
கிழக்கு முனையில் நாங்கள் !

தாழ்வாக விமானம் பறக்க
தாவிப் பிடிக்க ஆசை...
கிட்டத்தில் சப்தம்
எட்டிப் பிடிக்க ஆசை...
புலா உபின் பக்கத்தில் தெரியும் தீவு
புலாவ் தேகோங் இராணுவ பயிற்சி தீவு
கண்ணுக்கு எட்டிய தூரத்தில்
இந்தோனேசிய எல்லை காண...
கொட்டி அழைத்தது கடற்கரை
சீனப்பெருநாள் பொழுதை இயற்கையோடு !

நிரம்பிய கொள்கலன்
நிதானமாய்ச் சென்ற கப்பல்
செம்பாவாங் துறைமுகத்திற்கு இடதாக...
பாசிர் பஞ்சாங் துறைமுகத்திற்கு வலதாக
பலவடுக்கு பலசரக்குக்
கடற்பயணம் அண்டம் விட்டு அண்டம் செல்ல...

குடும்பமாய்ப் பலர்
குதூகலிக்க சிலர்
கூடாரத்தில் குடும்பம்....
கொத்துக்கொத்தாய் உறவுகள்
பூத்திட்ட செந்நாய் ஆண்டு....
புத்துணர்வு பலரின் மனதில்
வித்திட்ட ஷெங் சான் சமூக மன்றம்
மொத்தத்தில் இந்திய நற்பணி
செயற்குழு ஏற்பாட்டில் யாவும் !

குழந்தைகள் பெரியவர் கலந்தே
குழுவானார்கள் பச்சை சிவப்பு என
கையில் கட்டிய பட்டைதான் அடையாளம்
கணக்கில் இருபதைத் தாண்டி...
இரண்டு குழுக்களாய் !

முதல் ஆட்டம்....
ஒளித்து வைத்த வெண்ணிற
பன்னிரண்டு பந்துகள்
வேட்டையாட விரட்டி விட்டனர்
பன்னிரண்டு பந்தில் பாதிக்கு மேல் பச்சை குழு
பாராட்டும் பெற்றது முதல் வேட்டையில் !

சோடவில்லை சிவப்பு குழு
தண்ணீர் குவளை தடுமாற்றம் இன்றி நிரப்ப
பாராட்டை தட்டிச் சென்றது.
கடற்கரை குளியல் களிப்பில் யாவரும்
உடற்பயிற்சி எனவெண்ணி உப்பு நீரில் உடம்பும் மனதும்
பங்கிட்ட உணவெல்லாம் பாங்காய் புத்துண்டு
பரவசத்தில் பகலெல்லாம் களிப்பு !
வழக்கமான உணவுதான் விருந்தாய்க் களித்தனர்
வகைவகையான உணவில்
புளியோதரை தயிர்சாதமும் தடையில்லலா
எலுமிச்சை ஊறுகாய் கூட
மொத்தத்தில் நிரம்பிய வயிறு மட்டும் அல்ல மனதும் தான் !

பாலித்தீன் தட்டில் பகடையாய்ப் பிங்பால் விளையாட்டு...
ஒன்பதுக்கு ஐந்து என தட்டிச்சென்றது சிவப்பு குழுவின் பாராட்டு
பலூன் ஊதும் விளையாட்டில் பச்சையை மிஞ்சியது மீண்டும் சிவப்பு குழு...
கிரீன் டீ குடிப்பதில் கிளர்ச்சி எழுச்சி...
பச்சை குழு பரித்தது வெற்றிக் கனியை...,
கடற்கரை விளையாட்டை களிப்போடு களித்தோமே !

பிங்பால் யாவும் தொப்பியில் ஏந்த வேண்டும்
பச்சை சிவப்பு குழுவிற்கு மீண்டும் போட்டி
பிச்சை ஏந்தும்படி ஒருவர்
குழுவினர் மற்றொரு முனையில் மூன்று கெஜம் தூரம் தள்ளி நிற்க !

புள்ளிகளை அள்ள வேண்டி
துள்ளிய விளையாட்டும் களிப்பே !
இன்றைய வெற்றியாளர் சிவப்பு குழுவாம் !
இடையிடையே ஏறும் விமான சத்தம்
தடையில்லை கொண்டாட்டம்
மடை திறந்த கவலையெல்லாம்
கடற்கரையில் நிறுத்தி விட்டு
திடமான மனத்தோடு பயணம் வீட்டிற்கு !

மட்டற்ற மகிழ்ச்சி
திட்டமிட்ட நேரத்தில் தெவிட்டாத இன்பம் !
வாழ்நாள் என்றும் எங்கள் மனதில் தங்கும் !
புறப்பட்ட பேருந்தில்
வார்த்திட்ட கவிதை சுடச்சுட
மங்காத எங்கள் மனதில்
தங்கட்டும் வாழ்நாள் பதிவாய்
வருடிவிட வரட்டும் வருடங்கள் பல கடந்தும்
பசுமை நினைவுகள் பதியட்டும் நினைவலையாய் !




ஆக்கம்
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

No comments:

Post a Comment