Saturday, 17 November 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 10-11-2018-ல் 13ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (10-11-2018 அன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழாவாக 13 ஆவது நிகழ்ச்சி)......

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

ஹவ்காங் குடியிருப்பு பகுதி 3-ல் 10-11-2018 மாலை 5.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழாவாக மாதாந்திர நிகழ்ச்சி (13ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. திருமதி. துளசிமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

கடந்த சில வாரங்களாக மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்தியிருந்ததால் பரதநாட்டியம் மற்றும் சங்கீதம் இல்லாமல் நேரடியாக நிகழ்ச்சிக்குள் சென்றுவிட்டோம். இந்த மாத சந்திப்பில், முதலாவதாக ஜீவஜோதிகா, பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான 'பழமொழி நானூறு' என்ற நூலிலிருந்து கல்வி பற்றி எடுத்துரைக்கும் இரண்டு பாடல்களை வழங்கிச் சென்றார். சர்வினி 'நன்றி ஒருவருக்கு செய்தக்கால்' என்ற மூதுரை பாடலை வழங்கிச் சென்றார். நிக்கிதா பழமொழிகள் பலவற்றை வழங்கினார். பிரவிதா ஆயக்கலைகள் 64 முழுவதையும் சிறப்புடன் வழங்கிச் சென்றார்.

அஸ்வின் 'புறாவும் எறும்பும்' என்ற தலைப்பில் நன்னெறிக் கதைவொன்றை அழகுறச் சொன்னார். திருக்குறள் சிலவற்றை வழங்கினார் கவி ஆராதனா. அன்னையை வேண்டுதல் என்ற பாரதியார் பாடலை அழகுற வழங்கினார் தனீஷ்ராஜ்.சமஸ்திகா, வழிபாட்டு பாடல் ஒன்றை பாடினார். 'நான் விரும்பும் ஆசாரக்கோவை" என்ற தலைப்பில் சரளமாக பேசினார் அன்யா. 'வெட்டெனவை மெத்தநவை வெல்லாவாம்' என்ற நல்வழிப் பாடலைப் பாடி பொருளும் வழங்கினார் சந்தோஷ். கிருஷவ் 'அச்சமில்லை அச்சமில்லைஎன்ற பாரதியார் பாடலை அழகுறப் பாடினார்.

தொடர்ந்து வந்த விமல் விவேக சிந்தாமணி நூலில் வரும் 'புத்திமான் பலவான் ஆவான்' பாடலை 'சிங்கமும் முயலும்' என்ற நன்னெறிக் கதையுடன் சிறப்பாக வழங்கினார். 'இனியவை கூறல்' என்ற அதிகாரத்தில் வரும் திருக்குறள்கள் முழுவதையும் வழங்கினார் நந்திகா. கௌஷிகா ஆத்திசூடி வழங்கினார். தாக்ஷாயிணி நன்னெறி பாடலான 'ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்' பாடி பொருளும் வழங்கினார். ஆத்திசூடி வழங்கினார் ஹர்ஷினி. இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை பற்றியச்  சுவையான செய்திகளை வழங்கிச் சென்றனர் இரட்டையர்கள் தியா மற்றும் திவ்யா
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மற்றும் உலகநீதி என மூன்று நூல்களையும் கலந்து படைத்தார் சமிக்ஸா.

சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையில்கம்பன் அடிபொடி' என்ற தலைப்பில் அமைந்த பாடலை அறிமுகப்படுத்தினார். இதில் அகத்தியர் முதல் தமிழ் நூல்களை தொகுத்தோர், காத்தோர் என தமிழ்ச் சான்றோர்களை மதித்து அவர்களுக்கெல்லாம் அடியேன் என வரும் அந்த பாடலின் பெருமைதனை கூறினார்

அதோடு வாழ்வியல் இலக்கியப் பொழில் முதலாம்
ஆண்டுமலர் உருவாக உதவியாக இருந்தோரையும் நினைவுகூர்ந்து அடுத்த மாதம் வரவிருக்கும் -பொழில் (e-pozhil quaterly magazine) காலாண்டிதழில் தம்முடைய படைப்புகளை அளிக்க விரும்புவோரை வரவேற்று மகிழ்ந்தார். 

சிறிய இடைவேளைக்குப் பின் தொடங்கிய நிகழ்ச்சியில், பெரியவர்கள் படைக்கும் அங்கத்தில் சங்க இலக்கிய உரையில், 'கடையேழு வள்ளல்கள்' பற்றி சுவையான நல்ல பல தகவல்களை வழங்கினார் மருத்துவர் திருமதி அன்னபூரணி. "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற தலைப்பில் நமது நிகழ்சிகளில் தொடர்ந்து சிறப்புரை வழங்கி வரும் முனைவர் மா.இராஜிக்கண்ணு அவர்கள் இந்த மாதம் ஐம்பெரும் காப்பியங்கள்  பற்றி சுவையான தகவல்களை தகுந்த பாடல்களோடு தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர் தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி திரு.அண்ணாமலை அவர்கள் 'சங்க இலக்கியத்தில் வரும் பூக்கள்' என்ற தலைப்பில் புறநானூறு மற்றும் குறுந்தொகை நூல்களில் வரும் சில பாடல்களோடு குறிஞ்சி மற்றும் முல்லை பற்றியும் சரதுகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ தற்போது பூத்திருக்கிறது எந்த செய்தியையும் அளித்தது குறிப்பிட தக்கது. 

சித்த மருத்துவ குடும்பத்தில் இருந்து வரும் கவிஞர் சாவித்திரி பல அரியச் செய்திகளை சுவைபட கூறினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அங்கமாக அமைந்தது சிறப்பான செய்தியாகும். மேடையேறிய மாணவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நினைவுபரிசினை வழங்கி மகிழ்ந்தார் திருமதி பவித்ரா அவர்கள். ஒவ்வொரு மாதமும் நமக்கு இரவு உணவு மூலம் விருந்தோம்பல் நிகழ்த்தும் அனைத்து வாழ்வியல் இலக்கியக் குடும்பங்களை நினைவு கூறுவது வழக்கம். கடந்த சில நிகழ்ச்சிகளாக அதனை சரிவர குறிப்பிட முடியவில்லை. அந்தந்த மாதங்களில் விருந்தோம்பல் கொடுத்த குடும்பத்தினரை குறிப்பிட்டு மறவாமல் நன்றியைத் தெரிவித்தனர் நெறியாளர்கள்.

இடையிடையே, நல்ல பல சுவையான செய்திகளோடு, நிகழ்ச்சியை அழகுற நெறிபடுத்தி சென்றனர் திருமதி எழிலரசி மற்றும் திருமதி சவிதா. நன்றியுரை வழங்கிய திருமதி பவித்ரா மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார். இந்த மாதம் பிறந்தநாள் விழாவுக்கு மாணவர்கள் பெயர் எதுவும் பதியவில்லை என்பதால் தமிழில் பிறந்தாள் பாடல் காணொளி திரையிடப்படவில்லை.

தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  13 ஆவது சந்திப்பு 10-11-2018 நிகழ்ச்சியின்....


புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:
காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின் Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.


நன்றி !

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்