Sunday 29 July 2018

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 28-07-2018 தமிழ்ச்சங்கமம் 2018

தஞ்சாவூர் “தமிழ்ப் பல்கலைக் கழகம்” மற்றும் “அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை” இணைந்து நடத்தியவரும் “தமிழ்ச்சங்கமம் 2018” (இந்தியத் தமிழ்ச்சங்கங்களின் மாநாடு)
 திருவள்ளுவராண்டு 2049 ஆடித்திங்கள் 11,12,13 (ஜூலை 27,28,29 2018) விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது.

வழிநெடுகிலும் காவிரியாற்றின் துணையாறுகள் மற்றும் கால்வாய்கள் கரைபுரள்வதைக் காண மனம் நிறைவாக இருந்தது. சற்று காலங்கடந்த மதியவுணவு என்றாலும் நிறைவான உணவு, நெற்களஞ்சிய மண்ணில் விளைந்த நெற்மணியும், கூட்டும், பரிமாறும் பாங்கிலும் தமிழ்மணம் காண மனம் நெகிழ்ந்தது. நான் அடிக்கடி தென்தமிழகத்திற்கு பயணிக்கும் வாய்ப்பில்லாததால் மண்வாசனையை உணர்ந்ததில் மகிழ்வே.

அழகிய நுழைவாயில்,
அகன்ற சாலைகள்,
ஆயிரம் காணி நிலத்தில்
ஆங்காங்கே கட்டிடங்கள்;
மயில்கள் அகவக் கேட்டேன்;
குயில்கள் கூவக்கேட்டேன்;
தேனடை பலவும்;
நேர்த்தியான புறாக்கள் கூட்டம்;
இவற்றைக் கண்ட என்னுடைய மனமோ துள்ளிவரும் மானாய்த் துள்ளி விளையாடக் கண்டேன்.

மாலை 3 மணியளவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை அடைந்தபோது தமிழின உணர்வுகொண்டோரின் அன்பும், அரவணைக்கும் பாங்கும் என்னை நெகிழ்வில் ஆழ்த்தியது. கருத்தரங்க அமர்வு பொழிவு,
மொழிப்புல அவையத்தில்
கே.அசோக்குமார் அவர்கள்
(நிறுவனர் தொண்டைமண்டலப் பன்னாட்டுத் தமிழ்க் கூட்டமைப்பு) முன்னிலையில் இடம்பெற்றுக்கொண்டிருக்க, நான்அரங்கில்
நுழைந்த போது தமிழ்ப் பாரம்பரிய முறையில் தமிழ்தாயக்கு அரியணை, பூக்கோலம் வரவேற்று நின்றது. மருத்துவர் மு.சிவக்குமரன் அவர்கள் பழைய சோறு நீரில் மூழ்க வைத்திருந்து அதை மறுநாள் பயன்படுத்துவது தவறில்லை என்றும் மற்ற வகை குழம்பு வகைகளை மீதம் இருப்பின் குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்தும் சூடுபடுத்தி மறுபயன்பாட்டிற்கு உட்படுத்த இருக்கும் ஆபத்துகளையும் அறிவுறுத்தினார். இது நம்முடைய நிகழ்ச்சியில் வரும் மருத்துவக் குறிப்புகள் அங்கத்தை நினைவூட்டியது.

தொடர்ந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கலந்து, ஐவகை நிலங்களுக்கான மரங்களாக எண்ணி, தமிழ்ப் பல்கலைக் கழக முகப்பில் மிகப் பெரிய அளவிலான வட்டத்திற்குள் வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மற்றும் தென்கிழக்கு திசைகள் சூழ நடுவில் ஆழ மரக்கன்றுகள் நடுவிழா நடைபெற்றது புதுமையிலும் புதுமை. அவற்றுள் ஆலமரம், சந்தன மரம் முதலியனவும் அடங்கும்.

குறிப்பாக சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் சார்பில் கொண்டு சென்ற (சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள சிங்கப்பூர்
மண்) மற்றும் அந்தமான் நாட்டிலிருந்தும் கொண்டு வந்த மண்ணும் சேர்க்கப்பட்டது சிறப்பாகும்.

முன்பே அறிமுகம் கண்டிருந்தபோதும் துணைவேந்தர் திரு.பாஸ்கரன் அவர்கள் என்னை வரவேற்று மகிழ்ந்தார். தில்லி தமிழ்ச்சங்கம், ஒரிசா தமிழ்ச்சங்கம், அந்தமான் இலக்கிய மன்றம் போன்ற எண்ணற்ற தமிழ்ச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கொண்டதில் மகிழ்வே.

மாலை 6.30 மணியளவில் ‘சிலம்பின் சொல் (என்னும்) குடிமகள் பயணம்’ என்ற வரலாற்று நாடகம் கரிகாற்சோழன் கலையரங்கில் அரங்கேறியது. இதில் கருத்துள்ள பல சுவையான சம்பவங்கள் இயல் இசை நாடக வடிவில் மிகவும் உற்சாகமாக தமிழர் பண்பாட்டையும் அறிவுறுத்திச் சென்றது.
வழக்கமான விருந்தோம்பல் மற்றும் பரிமாற்றங்கள் என நிகழ்ச்சி நிறைவடைய மதுரையை நோக்கியப் பயணத்திற்கு தயாராகிறேன்.

தமிழ் மணத்துடன்.



No comments:

Post a Comment