Saturday 12 May 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 14-04-2018-ல் 6ஆவது சந்திப்பு - இலக்கியச் சங்கமம் 2018


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (14-04-2018 அன்று 6 ஆவது நிகழ்ச்சி)

 

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

 

சிராங்கூன் சமூக மன்றத்தில் 14-04-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

 

மங்கலம் பொங்க மங்கையர் கூடி மல்லிகை பூவோடு மற்ற இன மலர் சேர்த்து மகிழ்வாக வார்த்திட்ட மலரிதழ் மாக்கோலம், மணிநேரம் கடந்தாலும் மங்காத ஒளியோடும், மருதாணி கை சேர மங்கல ஒலி முழங்க மற்றுமொரு அலங்காரம் அகல் விளக்கும் சூழ வைத்தனர்.

 

ஐந்தடி உயர அழகான குத்து விளக்கை மலர்கொண்டு அலங்காரம் மல்லிகை சரம் கொண்டும் இடையிடையே சிவந்த ரோசாப்பூ நிற்க அழகோ அழகு.

 

விழாவிற்கு மேள தாளம் வைக்கவில்லை, இயற்கை அன்னை தந்தாள் இடி, மின்னல் முழக்கத்தோடு இறங்கி வந்து மழை சொரிய, வெற்று அரங்கம் வியர்க்க வைத்தது உண்மைதான், மாலை 6 மணிக்கு. தூறல் நின்றுவிட தொடர்ந்து வந்த அலையாக அரங்கம் நிரம்பியது அடுத்த இருபது நிமிடங்களில்.

 

தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. ரிதம்ஸ் அஸ்தெடிக் சொசைட்டி இசைப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் பரவசம் தந்தது முதல் அங்கமாக. இசைபாடி மகிழ்வித்தார் உருகாமல் இருக்காதய்யா என்று உருகி பாடிச் சென்ற ஜீவஜோதிகா. வந்தோரை வரவேற்று மகிழ்ந்தார் திருமதி கோமதி.

 

இலக்கியச் சங்கமம் 2018 விழாவையொட்டி நடைபெற்ற மாணவர்களுக்கான போட்டியில் மழலையர் பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற ராஜஶ்ரீ தம் பெயருக்கு ஏற்றாற்போல் நெடுஞ்செழியப் பாண்டியன் வேடமேற்று வீற்றிருந்தார் மேடையில். தோளும் வலுத்திருக்க;

வாளும் கூர்மையாய் வாக்கிலும் தென்பட்டது.

 

தினம் தினம் திருக்குறள் பாட திருவள்ளுவராய் வந்தார் தொடக்கநிலை 1 பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற சானா கான். தாடியும் நீண்டிருக்கும் அவருடைய உரை வீச்சும் ஓங்கியிருந்தது.

 

தொடக்கநிலை 2 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நந்திகா 10 திருக்குறள்களை ஒருவரி

விளக்கத்தோடு திடமுடன் கொண்டுவந்தார். பதினைந்து திருக்குறளை ஒரு வரி விளக்கத்துடன் வழங்கினார் தொடக்கநிலை 3 பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த லிதர்ஸா. அழகியதோர் கதையை வழங்கினார் தொடக்கநிலை 4/5 பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த கவின்நிலா. சிறப்பு பங்கேற்பாக நிருதி சிலப்பதிகாரத்தில் மதுரை காண்டம் ஒரு பகுதியையும், கிஷோர் பாரதியார் கவிதையோடும் வந்து நிகழ்ச்சியை மெருகூட்டினர்.

 

 

தொடர் மழையாக வந்த சிறார்களின் இலக்கிய உரைகளை அடுத்து பெரியவர்களுக்கான அங்கத்தில் ஆசாரக்கோவை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் இருந்து சிலவற்றை சுவைபட வழங்கினார் பவித்ரா கண்ணன்.

 

ஆவலோடு எதிர்பார்த்திருந்த சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு நடத்திட வந்திருந்த அமிர்கடேஸ்வரர் அவர்களுக்கு சிறப்பு மரியாதை செய்தார் வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி. ஒரு மணிநேரம் தமிழ் இலக்கியம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள்என்னும் தலைப்பில் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்து இருந்ததது. வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி இந்த முறை தாம் கொண்டு வந்திருந்த மூலிகை செடிகளை பற்றிய அழகிய குறிப்புகளை தந்திருந்தார்.

 

எதிர்பார்த்து குறித்த நேரத்தில், அரங்கினுள் நுழைந்த சிராங்கூன் சமூக மன்ற ஆலோசகர் திருவாட்டி சான் உய் யூ மேடையை அடைய குத்துவிளக்கு ஏற்றி வைத்ததார். தொடர்ந்து சிராங்கூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் துணைத்தலைவர் கதிர் ஏற்றினார், அடுத்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் தொடர்ந்து அவர்தம் மனைவி உஷா கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறப்புரை வழங்கிய முனைவர் அமிர்தகடேஸ்வரர் உள்ளிட்டோர் ஏற்றினர்.

 

 

துடிப்பான கிராமிய ஆட்டத்துடன் வந்தனர் ரியா முகில், சர்வினி மற்றும் சமக்‌ஷா. முத்தான மூன்று பாடல்களை குழைத்து கொடுத்த நாட்டுப்புற பாடல் அனைவரையும் மனதளவிலும் உடலளவிலும் துள்ளாட்டம் போட வைத்தது. தொடர்ந்து வந்த கும்மியாட்ட குழுவினர் ஆட்டம் அரங்க  அதிரும் வண்ணம் கைத்தட்டலைப் பெற்றது. ஆட்டம் முடிந்து அழகிய இசைக்கச்சேரியைத் தந்தனர் ரிதம்ஸ் அஸ்தெடிக் சொசைட்டி இசைப்பள்ளி மாணவர்கள்.

 

 

பரிசளிப்பு விழாவில் மழலையர் பள்ளி மாணவர்கள் முதல் தொடக்க நிலை மாணவர்கள் என 22 பேருக்கு பரிசளிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்புறச் செய்த ரிதம்ஸ் அஸ்தெடிக் சொசைட்டி இசைப்பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு நினைவுப்பரிசையும், சிறப்புரையாற்றிய முனைவருக்கு ஒரு நினைவுப்பரிசையும் வழங்கினார் சிறப்பு விருந்தினர் ஆலோசகர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றமைக்கு ஆலோசகருக்கு நினைவுப்பரிசை வழங்கி மகிழ்ந்தார் தலைவர்.

 

நன்றியுரை வழங்கிய உஷா கிருஷ்ணமூர்த்தி மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்தார். அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திருமதி பவித்ரா கண்ணன் மற்றும் துளசிமணி சத்தியமூர்த்தி.

 

 

வழக்கம் போல், இந்த மாதம் பிறந்தநாளை கொண்டாடியவர் ரியா முகில் அவர்களை மேடையில் ஏற்றி, கவிஞர் அறிவுமதி அவர்கள் இயற்றிய  தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாடல்களை பாடி அனைவரும் தம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

ஊடகவியலாளரான திரு மணிமாறன் அவர்களின் குழுவினர் இன்றைய நிகழ்ச்சியினையும், தொடக்கம் முதலே பதிவு செய்து வந்தனர். அவர்களின் சகோதரர் சரவணன் நிகழ்ச்சியில் வந்த பல அங்கங்களையும் கண்டு களிப்புற்றார்.  

 

தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

 

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  6 ஆவது சந்திப்பு 14-04-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:

https://photos.app.goo.gl/3PHMuCDRUSfBp09o1

 

காணொளியை இணையத்தில் காண ணைப்பு கீழே.

You tube link:

https://youtu.be/xOsszi3l5YY


 

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

www.vazhviyalilakkiyapozhil.blogspot.com

 

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

First name: Vazhviyal Ilakkiya

Last name: Pozhil Singapore

 

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்

Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

 

நன்றி !

 

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்

No comments:

Post a Comment