Sunday 29 July 2018

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 28-07-2018 தமிழ்ச்சங்கமம் 2018

தஞ்சாவூர் “தமிழ்ப் பல்கலைக் கழகம்” மற்றும் “அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை” இணைந்து நடத்தியவரும் “தமிழ்ச்சங்கமம் 2018” (இந்தியத் தமிழ்ச்சங்கங்களின் மாநாடு)
 திருவள்ளுவராண்டு 2049 ஆடித்திங்கள் 11,12,13 (ஜூலை 27,28,29 2018) விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது.

வழிநெடுகிலும் காவிரியாற்றின் துணையாறுகள் மற்றும் கால்வாய்கள் கரைபுரள்வதைக் காண மனம் நிறைவாக இருந்தது. சற்று காலங்கடந்த மதியவுணவு என்றாலும் நிறைவான உணவு, நெற்களஞ்சிய மண்ணில் விளைந்த நெற்மணியும், கூட்டும், பரிமாறும் பாங்கிலும் தமிழ்மணம் காண மனம் நெகிழ்ந்தது. நான் அடிக்கடி தென்தமிழகத்திற்கு பயணிக்கும் வாய்ப்பில்லாததால் மண்வாசனையை உணர்ந்ததில் மகிழ்வே.

அழகிய நுழைவாயில்,
அகன்ற சாலைகள்,
ஆயிரம் காணி நிலத்தில்
ஆங்காங்கே கட்டிடங்கள்;
மயில்கள் அகவக் கேட்டேன்;
குயில்கள் கூவக்கேட்டேன்;
தேனடை பலவும்;
நேர்த்தியான புறாக்கள் கூட்டம்;
இவற்றைக் கண்ட என்னுடைய மனமோ துள்ளிவரும் மானாய்த் துள்ளி விளையாடக் கண்டேன்.

மாலை 3 மணியளவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை அடைந்தபோது தமிழின உணர்வுகொண்டோரின் அன்பும், அரவணைக்கும் பாங்கும் என்னை நெகிழ்வில் ஆழ்த்தியது. கருத்தரங்க அமர்வு பொழிவு,
மொழிப்புல அவையத்தில்
கே.அசோக்குமார் அவர்கள்
(நிறுவனர் தொண்டைமண்டலப் பன்னாட்டுத் தமிழ்க் கூட்டமைப்பு) முன்னிலையில் இடம்பெற்றுக்கொண்டிருக்க, நான்அரங்கில்
நுழைந்த போது தமிழ்ப் பாரம்பரிய முறையில் தமிழ்தாயக்கு அரியணை, பூக்கோலம் வரவேற்று நின்றது. மருத்துவர் மு.சிவக்குமரன் அவர்கள் பழைய சோறு நீரில் மூழ்க வைத்திருந்து அதை மறுநாள் பயன்படுத்துவது தவறில்லை என்றும் மற்ற வகை குழம்பு வகைகளை மீதம் இருப்பின் குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்தும் சூடுபடுத்தி மறுபயன்பாட்டிற்கு உட்படுத்த இருக்கும் ஆபத்துகளையும் அறிவுறுத்தினார். இது நம்முடைய நிகழ்ச்சியில் வரும் மருத்துவக் குறிப்புகள் அங்கத்தை நினைவூட்டியது.

தொடர்ந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கலந்து, ஐவகை நிலங்களுக்கான மரங்களாக எண்ணி, தமிழ்ப் பல்கலைக் கழக முகப்பில் மிகப் பெரிய அளவிலான வட்டத்திற்குள் வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மற்றும் தென்கிழக்கு திசைகள் சூழ நடுவில் ஆழ மரக்கன்றுகள் நடுவிழா நடைபெற்றது புதுமையிலும் புதுமை. அவற்றுள் ஆலமரம், சந்தன மரம் முதலியனவும் அடங்கும்.

குறிப்பாக சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் சார்பில் கொண்டு சென்ற (சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள சிங்கப்பூர்
மண்) மற்றும் அந்தமான் நாட்டிலிருந்தும் கொண்டு வந்த மண்ணும் சேர்க்கப்பட்டது சிறப்பாகும்.

முன்பே அறிமுகம் கண்டிருந்தபோதும் துணைவேந்தர் திரு.பாஸ்கரன் அவர்கள் என்னை வரவேற்று மகிழ்ந்தார். தில்லி தமிழ்ச்சங்கம், ஒரிசா தமிழ்ச்சங்கம், அந்தமான் இலக்கிய மன்றம் போன்ற எண்ணற்ற தமிழ்ச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கொண்டதில் மகிழ்வே.

மாலை 6.30 மணியளவில் ‘சிலம்பின் சொல் (என்னும்) குடிமகள் பயணம்’ என்ற வரலாற்று நாடகம் கரிகாற்சோழன் கலையரங்கில் அரங்கேறியது. இதில் கருத்துள்ள பல சுவையான சம்பவங்கள் இயல் இசை நாடக வடிவில் மிகவும் உற்சாகமாக தமிழர் பண்பாட்டையும் அறிவுறுத்திச் சென்றது.
வழக்கமான விருந்தோம்பல் மற்றும் பரிமாற்றங்கள் என நிகழ்ச்சி நிறைவடைய மதுரையை நோக்கியப் பயணத்திற்கு தயாராகிறேன்.

தமிழ் மணத்துடன்.



Monday 16 July 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 14-07-2018-ல் 9 ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (14-07-2018 அன்று 9 ஆவது நிகழ்ச்சி).

சிராங்கூன் சமூக மன்றத்தில் 14-07-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

வாழ்க நிரந்தரம் என்ற தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. நம்பி கெட்டவர் எவரைய்யா...என்றவொரு பக்தி பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிவானி.
மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற வந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் மருத்துவர் திருமதி அன்னபூரணி.
சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தை, தமிழர்கள் கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்கிறார்கள் என்ற  நெகிழ்வான கருத்தை அமெரிக்காவில் முன்னாள் ஒபாமா அவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல்கள் நிகழ்ச்சியில் நடந்த அனுபவத்தைக் கூறி தொடங்கி வைத்தனர் நெறியாளர்களாக வந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.
நன்றி ஒருவருக்கு செய்தக்கால்என்றதொரு மூதுரைப் பாடலுடன் விளக்கத்தை வழங்கியனார் சர்வினி. அடுத்து வந்த சமஸ்திகா காக்கைச் சிறகினிலேஎன்ற பாரதியார் கவிதையை பாடிச்சென்றார். தொடர்ந்து வந்த ஜோஷிகா, ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியார் அழகியப் பாடலை பாடினார்.
தண்டலை மயில்கள் ஆட என்ற அழகிய கம்பராமாயணப் பாடல் வரிகளைப் பாடியும் பொருள் கூறியும் வழங்கிச் சென்றார் ஜீவஜோதிகா. கண்ணகி வழக்குரையாடல் என்ற தலைப்பில் அழகுற வாதிட்டார் கமலிகா.
தொடர்ந்து வந்த கௌசிகா கோகுல் பூட்டைத் திறப்பது கையாலே என்ற பாரதியார் பாடலை அழகுறப் பாடினார்.
வழக்கம் போல் காணொளி வழியாக வந்த ஶ்ரீயா திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரப்பாடல் நாமர்க்கும் குடியல்வோம் நமனையஞ்சோம்பாடலை அழகுறப் பாடினார்.

அடுத்து வந்த ஶ்ரீஜா, “எண்ணெழுத்து இகழேல்என்ற ஆத்திச்சூடிக் கதையைக் கூறினார்.
அடுத்து வந்த அஸ்வின் நேர்மையான விறகுவெட்டிஎன்ற நன்னெறிக் கதையைக் கூறினார். மனதில் உறுதி வேண்டும் என்ற பாரதியார் பாடலைச் சுவைபட பாடினார் ஶ்ரீஹரி. தேவைக்கேற்ப தேவைப்படுவனவற்றை மட்டும் பேசவேண்டும் என்றதொரு கருத்தை வலியுறுத்தும் கதையாக ஆமையும் கொக்கும்என்ற தலைப்பில் நன்னெறிக் கதையை வழங்கினார் பிரித்தீவ். அடுத்து வந்த சந்தோஷ்குமார் மூதுரை நூலில் வந்த கடவுள் வாழ்த்துப் பாடலான வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்றப் பாடலை அழகுறப் பாடிச் சென்றார்.

உலக நீதிச் செய்யுள் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற செய்யுட் பாடலை வழங்கிச் சென்றார் தாட்சாயணி. ஆத்திச்சூடி வழங்கிச்சென்றார் கிருஷவ். தொடர்ந்து வந்த நந்திகா சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற அழகியப் பாடலையும் பாரதியார் பற்றிய சிறிய அறிமுகத்தையும் தமது இனியக் குரலால் பாடினார்.

தொடர்ந்து வந்த விமல் விவேக சிந்தாமணி பாடல் ஒப்புடன் முகம் மலர்ந்தேஎன்று தொடங்கும் விருந்தோம்பல் எவ்வாறு இருக்க வேண்டும் வலியுறுத்தும் பாடலை வழங்கினார்.
அடுத்து வந்த தனீஸ்ராஜ் பழமொழி கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கேற்ப நல்லதொரு கதையைக் கூறினார்
பௌசல் ஹினயா வழங்கிய சிந்தனைப் பேச்சில் பொழுதுபோக்கினால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிற்றுராற்றினார். தொடர்ந்து வந்த சலீம் ஸாபர் பேராசை பெரு நஷ்டம் என்ற தலைப்பில் நல்லதொரு கதையை வழங்கிச் சென்றார்.

சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி தமிழிசை என்ற தலைப்பில் பாவினங்களின் வகைகளையும் அவற்றுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா போன்ற பாக்களை எந்தெந்த சூழ்நிலைகளில் அரங்கேற்றம் செய்யப்படும் என்பதை விவரித்தார். நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர் அக்கால மன்னர்கள் யாவரும் தமிழின் தொன்மைகளை அறிந்திருந்தனர் என்றும் இக்கால தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதிய புதுக்கவிதையைக் கூட புரிந்துகொள்ளாத நிலையிலேயே தான் இருக்க காரணம் தமிழர்களாககிய நாம் நீர்த்துப் போன தமிழையேப் பருகிவருகின்ற காலமிது என்று வருந்தினார்.
சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கிய வேரும் விழுதும்என்ற புதிய அங்கத்தில் திருமதி. எழிலரசி மற்றும் அவருடைய புதல்வி கவின்நிலா சேர்ந்து திருவிளையாடல் படக்காட்சியை மிகவும் தத்ரூபமாக வழங்கி அரங்கினரை உற்சாகமூட்டினர்.
இரண்டாவது படைப்பாளிகளாக வந்த இரட்டையர் திருமதி துளசிமணி மற்றும் அவருடைய புதல்வி சம்ரிதா பழமொழி நானூறு வழங்கி விடுகதையோடு புதிர்போட்டனர்.


பெரியவர்கள் உரையில், திருமதி.மஞ்சுளா திரிகடுகம் நூலில் இருந்து சில பாடல்களை விவரித்தார். தொடர்ந்து வந்து,

முதுமொழிக்காஞ்சி நூலில் இருந்து சிறந்தப்பத்து அதிகாரத்தில் வந்த பாடல்களை பற்றி சிற்றுரையாற்றினார் திருமதி.தீபிகா.

நான்மணிக்கடிகை நூலில் இருந்து சில பாடல்களை விளக்கி உரையாற்றினார் திருமதி. ராதிகா. சேரன் பேச்சாளர் மன்ற முன்னாள் தலைவர் கவிஞர் உ.செல்வராஜூ இலக்கு என்ற தலைப்பில் தமது மன்ற இலக்கை எவ்வாறு சாத்தியப்படுத்தினார் என்பதையும் குழந்தைகளுக்கு லட்டு என்ற தலைப்பில் கவிதை வழங்கியும் சிறப்பித்தார். சிறப்புரை வழங்க தமிழகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள  அமைப்பின் தலைவர் அவர்களுடைய தந்தை பூ.எல்லப்பன் அவர்கள் இந்நிகழ்வு பற்றிய தமது அனுபவத்தையும் சில அறவுரைகளையும் மாணவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி சிறப்பித்தார்.

வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி. பிஸியோதெரபி நிபுணர் பெண்களுக்கான இயக்குமுறை பயிற்சிகளை காணொளி வழியாக விளக்கிய விதம் அருமை. பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றியுரை வழங்கிய திருமதி.தேவிபாலா கலியபெருமாள் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்து நன்றியுரைத்தால். தொடக்கம் முதல் கலந்துரையாடல்கள் மூலம் இடையிடையே குறிப்புகள், கதைகள், வினா விளக்கம் என பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திரு.கலியபெருமாள்

மற்றும் திரு.கார்த்திக். இவர்களுக்கிடேயான உரையாடல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து கடைசிவரை கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டுசென்ற விதம் மிக அருமை.

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  9 ஆவது சந்திப்பு 14-07-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:
https://photos.app.goo.gl/oKqP3wgtpYFCwt3d7

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:
https://youtu.be/nBIWb6WAV0U

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !
மரபுடன்,
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

வாழ்வியல் இலக்கியப் பொழில் 23-06-2018-ல் 8 ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (23-08-2018 அன்று 8 ஆவது நிகழ்ச்சி)

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

சிராங்கூன் சமூக மன்றத்தில் 23-06-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. தாம் தாம் தித்தாம்... என்றதொரு இசைக்கு பரதநாட்டியம் ஆடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிவானி. முத்தை தரு பக்தி ... என்ற திருப்புகழ் பாடலை இசைபாடிச் சென்றார் பிரஷிதா.
வந்தோரை வரவேற்று மகிழ்ந்தார் திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி. சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தை ஒரு அழகிய கதையுடன் தொடங்கி வைத்தனர் நெறியாளர்கள் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.

முதலாவதாக சமஸ்திகா ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியார் கவிதையை பாடிச்சென்றார். தொடர்ந்து வந்த ஜோஷிகா, நண்பர்களிடம் எப்படி நட்போடு பழக வேண்டும் என்பதை ளறும்பும் புறாவும் அழகியதோர் நன்னெறிக் கதையைக் மூலம் விளக்கினார்.

வழக்கம் போல் காணொளி வழியாக வந்த ஶ்ரீயா பாரதிதாசன் இயற்றிய மொழிவாழ்த்து பாடலை அழகுறப் பாடினார். பள்ளி விடுமுறையில் தாயகம் சென்றுள்ள தனீஷ்ராஜ் மனதில் உறுதிவேண்டும் என்ற பாரதியார் பாடலோடு வந்தார் காணொளி வழியாக.

அடுத்து வந்த அஸ்வின் எறும்பும் புறாவும் கதையோடு வந்தார். மழலைப் பாடலோடு வந்தார் நிக்கிதா. தேடிச் சென்று தினம் தின்று என்ற பாரதியார் வரிகளுடன் வந்தார் கமலிகா. காக்கை சிறகினிலே என்ற பாரதியார் பாடல் வரிகளை வழங்கினார் சர்வினி.

மூதுரை செய்யுள்களோடு வந்தார் சந்தோஷ்குமார். பாரதியார் பாடலோடு வந்தார் ஶ்ரீஹரி. சொர்கமும் நரகமும் கதையோடு வந்தார் பிரதஷிணா. தமிழகம் சென்றுள்ள நிதீஷ்ராஜ் ஆசாரக் கோவை பாடல்கள் பற்றி அழகுற விளக்கினார் காணொளி வழியாக. திருக்குறள் கதையைக் கூறிச் சென்றார் வாசினி. சங் க இலக்கியத்தில் வரும் 99 மலர்களின் பெயர்களை கூறிச்சென்றார் ஜீவஜோதிகா. நாலடியார் வரிகளோடு வந்தார் சம்ரிதா.

சிறுவர்கள் அங்கத்தை தொடர்ந்து வந்த வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி, தமது அறிமுக உரையில்சங்க இலக்கியத்தில் கடல்என்னும் தலைப்பில் புறநானூறு மற்றும் சீவக சிந்தாமணி பாடல்களை மேற்கோள்காட்டி வழங்கினார். சங்க கால நூல்களின் மீது ஏற்பட்ட காதல் பற்றி நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர் தமது இலக்கியப் பயணத்தை தெளிவுற வழங்கினார்.

சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கியவேரும் விழுதும்என்ற புதிய அங்கத்தில் திருமதி. பவித்ரா மற்றும் அவருடைய புதல்வி அன்யா சேர்ந்து நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற வரியின் மூலமான திருக்குறள் மற்றும் நாலடியார் பற்றி தொடங்கி, நாலடியார் பாடல்களை வழங்கினர்.

பெரியவர்கள் உரையில், திருமதி.உஷா கிருஷ்ணமூர்த்தி குறிஞ்சி திணைப் பற்றி சிற்றுரை வழங்கினார். தொடர்ந்து வந்த திருமதி.மஞ்சுளா இனியவை நாற்பது நூலில் இருந்து சில பாடல்களை விவரித்தார். முதுமொழிக்காஞ்சி நூலில் இருந்து பொய்யாப்பத்து அதிகாரத்தில் வந்த பாடல்களை பற்றி சிற்றுரையாற்றினார்.  நான்மணிக்கடிகை நூலில் இருந்து சில பாடல்களை விளக்கி உரையாற்றினார் திருமதி. ராதிகா. சங்க இலக்கியத்தில் கல்வி என்னும் தலைப்பில் சிற்றுரை வழங்கினார் திருமதி.துளசிமணி.

வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி. நன்றியுரை வழங்கிய திருமதி.அனுராதா சுரேஷ் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்தார். தொடக்கம் முதல் கலந்துரையாடல்கள் மூலம் இடையிடையே குறிப்புகள், கதைகள், வினா விளக்கம் என பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  8 ஆவது சந்திப்பு 23-06-2018 நிகழ்ச்சியின்....
புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:
https://photos.app.goo.gl/Bnyyog2Gh9x3wUf59

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:
https://youtu.be/yKNJMtt5iJM

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின் Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.
நன்றி !

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்